முஸ்லிம்கள் 15 பேர் பலி – விபத்திற்கு அரசே பெரியபட்டிணம் படகு விபத்து” பொறுப்பு!
செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, December 28, 2010, 16:45
இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டிணத்தைச் சேர்ந்த 15 முஸ்லிம்கள் படகு விபத்தில் நீரில் மூழ்கி இறந்தனர். பெரியபட்டிணத்தைச் சேர்ந்த அப்துல் குத்தூஸ் என்பவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். விடுமுறையில் ஊர் வந்த அவரும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் கடந்த 26.12.10 ஞாயிரன்று அருகில் உள்ள ”அப்பா தீவு” என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
ஒரு படகில் ஆண்களும், மற்றொரு படகில் பெண்களுமாக இரண்டு படகில் பயணித்த போது, பெண்கள் சென்ற படகு எதிர்காற்று பலமாக அடித்ததன் காரணமாக குலுங்க ஆரம்பித்துள்ளது. அதிலிருந்த பெண்கள் பயத்தின் காரணமாக ஒரு பக்கமாக ஒதுங்க படகு நீரில் மூழ்கியது. படகில் இருந்த 35 பெண்களும் நீரில் மூழ்கினர்.
அருகில் பயணித்துக் கொண்டிருந்த படகில் இருந்த ஆண்கள் உடனே ஊரில் இருந்த சகோதரர்களுக்கு தகவல் தெரிவிக்க, விபத்து செய்தி ஊர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது,
26.12.10 அன்று நடக்க இருந்த இராமநாதபுர மாவட்ட பொதுக்குழுவுக்கு கிளம்பிக் கொண்டிருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சகோதரர்களுக்கும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் சகோதரர்களும் அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த முத்துக்குளிக்கும் நபர்களோடு இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
அத்தோடு மட்டுமில்லாமல், விபத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களைக் கொண்டு செல்வதற்கும், மேலும் மீட்கப்பட்ட சகோதரிகளை மருத்துவமனை கொண்டு செல்வதற்கும் உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
அரசின் மெத்தனப்போக்கு:
படகு பயணித்த கடல்பகுதி பயணம் செய்ய தடைசெய்யப்பட்ட பகுதியாகும். அந்த பகுதியில் பவளப்பாறைகள் உள்ளதால் மீன்பிடிப்பதற்கும், மீனவர்கள் செல்வதற்கும் கூட தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட பகுதியில் இவர்கள் பயணம் செய்ததை அரசு எந்திரங்கள் கண்டுகொள்ளாததே இந்த விபத்திற்கு முழுமுதற்காரணமாகும்.
கடலோரகாவல்படையினர்கள் எத்தனையோ பேர் இருந்த நிலையிலும், அரசின் மெத்தனப்போக்கும், கையாலாகாத தனமும் தான் இந்த விபத்திற்கு காரணமாதலால் இதற்கு அரசே முழுபொறுப்பேர்க்க வேண்டும்.
அத்தோடுமட்டுமில்லாம்மல், ஒரு படகில் பயணம் செய்வதாக இருந்தால் அந்த படகு மூழ்கும் நிலை ஏற்பட்டால் முதலுதவிக்கு உயிர்காக்கக்கூடிய வகையில் தரப்படும், உயிர்காக்கும் மிதவை அங்கி (life jacket) படகில் இருப்பது உட்பட, இத்தனை பேரைத்தான் ஏற்ற வேண்டும் என்ற அளவுகளோடு உள்ள எந்தவிதிமுறைகளையும் எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளாதது இவர்களது கையாலாகாத தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
சில வருடங்களுக்கு முன்னால் தேக்கடியில் இது போன்று படகில் பயணித்தவர்கள் விபத்துக்குள்ளானது எத்தகைய விதிமுறைமீறல்களால் ஏற்பட்டது என்பதும் அரசாங்கத்திற்கு தெரியாமலில்லை.
ஒன்றுக்கும் உதவாத அரசு எந்திரங்கள்:
நீரில்மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்ட சில சகோதரிகளை மீட்டெடுத்து பெரியபட்டிணத்தில் உள்ள அரசுமருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு மருத்துவர்கள் ஏதும் இல்லாதிருந்ததன் காரணமாக காப்பாற்றப்பட வேண்டிய விலைமதிப்பற்ற மனித உயிர்கள் மரணிக்க நேர்ந்தது.
அவசர உதவிக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இருந்திருந்து முதலுதவி செய்திருந்தால் இன்னும் சில உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
மேலும், அருகிலிருந்த காவல்துறை வாகனங்களும், கப்பற்படைக்குச் சொந்தமான வாகனங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முன்வராததால் பொதுமக்கள் கடும் ஆத்திரத்திற்குள்ளாயினர். ஒரு புறம் பொதுமக்கள் நீரில்மூழ்கியவர்களை வெளியிலெடுத்து காப்பாற்றி முதலுதவி செய்ய, மறுபுறம் ஊருக்கு வெளியிலிருந்த கப்பற்படையினர் தாங்கள் தான் மீட்புப்பணியில் ஈடுபட்டோம் என்று பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் தந்தது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போன்று இருந்தது.
ஆபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் தங்களது வாகனங்களை உதவி செய்வதற்கு பயன்படுத்த மறுத்தவர்களையும், சரியாக விசாரிக்காமல் தவறான தகவல்களை வெளியிட்ட பத்திரிக்கைகள் மீது ஊர்மக்கள் ஆத்திரம் அடைந்ததோடு, மறுநாள் தகவல் சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களையும் ஊர் மக்கள் விரட்டியடித்தனர்.
சடலங்களை ஏற்ற மறுத்த 108 ஆம்புலன்ஸ்:
அவசரத்திற்கு உதவ வேண்டிய தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு தொலைபேசியில் அழைப்பு கொடுத்த போது இறந்த சடலங்களை நாங்கள் ஏற்ற மாட்டோம் என்று அவர்கள் கூறியதற்கு ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
108 ஆம்புலன்ஸ் இறந்த சடலங்களை ஏற்ற அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் அந்த ஊர் பொதுமக்களால் முன் வைக்கப்பட்டது.
விபத்தை தடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் அரசாங்கம், பொதுமக்களது உயிர்களுக்கு பாதுகாப்புத்தரவேண்டிய அரசு எந்திரங்கள், கையாலாக தனமாக இருந்துவிட்டு, தற்போது தங்களது கையாலாகாதனத்தை மறைப்பதற்கு இறந்தவர்களுக்கு ஒரு இலட்சம் அறிவித்துள்ளது. எத்தனை லட்சங்களை இழப்பீட்டுத்தொகையாக இவர்கள் அறிவித்தாலும் இவர்களது கையாலாகாதனத்தையும் அலட்சியப்போக்கையும் மறைப்பதற்கு இந்த லட்சங்கள் உதவாது என்பதை பதிவுசெய்கின்றோம்.
No comments:
Post a Comment